தனது தலையீட்டில், மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வந்து குடியேற்றுவதாக, சில இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத் தலங்களில் இனவாதக் கருத்துக்கள் வௌியிடப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, இதனைச் செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வருவது அல்லது அது குறித்து எந்தவொரு கருத்துக்களையோ நிலைப்பாடுகளையோ தான் தெரிவிக்கவில்லை என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழும் இந்த நாட்டில், இதுபோன்ற கருத்துக்களை பரப்பி, தன்னை இதனுடன் தொடர்புபடுத்தி, பிரச்சினைகளை ஏற்டுத்த முற்படும் சதிகாரர்களை நாட்டுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதால், தான் இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு வழங்கியுள்ளதாக, ரிஷாட் பதியூதின் மேலும் தெரிவித்துள்ளார்.