மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக்கொண்டார் ரணில்

389 0

ranil-prathamar-720x480-720x480இறுதிக்கட்டப் போரின் போது ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு சட்டக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை முன்வைத்தார்.

“எனினும் இந்த விசாரணைகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய உள்ளக விசாரணைப் பொறிமுறையின் கீழேயே மேற்கொள்ளப்படும். பெரிய அளவில் இறப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்காகத்தான் நாம் காணாமல்போனோர் அலுவலகத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

இந்த காணாமல்போனோர் அலுவலகம் எதிர்காலத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். காணாமல்போன மாணவர்கள் குறித்தும், எக்னலிகொட உட்பட காணாமல்போன பத்திரிகையாளர்கள் குறித்தும் ஆராயும். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல்களையும் இந்த அலுவலகம் சேகரித்து ஆவணப்படுத்தும். எத்தனை பேர் காணாமல்போனார்கள் என்ற விபரத்தை அறிய அனைவரும் ஆவலாக இருக்கின்றோம்.

இங்கு காணாமல்போனதாகக் கூறப்படும் நபர் டென்மார்க்கில் செல்வந்தராக வசிக்கக்கூடும். இதுவும் நடக்கலாம். இது போன்ற பல வழிகளில் விசாரிக்கவுள்ளோம். இந்த காணாமல்போனோர் அலுவலகம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நோக்கி எம்மை நகர்த்தும். உண்மை அசிங்கமானதாக இருக்கலாம்.

ஆனால் நாம் அதனுடன் வாழ முடியும். உண்மை எம்மை தண்டனையை நோக்கித்தான் நகர்த்தும் என்பது அர்த்தமல்ல. ஆனால் உண்மைகளை கண்டறிய வேண்டும். கடந்தகால கசப்பான சம்பவங்களை நாம் மறக்க வேண்டும். ஏனெனில் எம்முன்னே நல்ல எதிர்காலமொன்று இருக்கின்றது. அதனை எவ்வாறு செய்வது, எப்படி செய்யப்போகின்றோம் என்றால் இந்த அரசாங்கம் புதிய சட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றும்” என்றார்.