எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில், வாழைச்சேனை காகித ஆலையைப் பார்வையிட இன்று (23) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
ஆலையை புனரமைப்புச் செய்வது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஆலையின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
கல்முனையில் நாளை (24) நடைபெறவிருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரா.சமபந்தன், மட்டக்களப்புக்கு தற்போது வருகை தந்துள்ளார்.
நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் வாழைச்சேனை காகித ஆலையை, கொரிய நிறுவனமொன்று, புனரமைத்து 20 வருட குத்தகை அடிப்படையில் செய்றபடுத்த முன்வந்துள்ளதாகவும் ஆனால், அரசாங்கம் அதற்கான ஒத்துழைப்பைப் பெற்று, ஆலையை இயங்க வைப்பதில் தாமதமும் அசமந்த போக்குடனும் நடந்து கொள்வதாக ஊழியர்கள், இரா.சம்பந்தனின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
அத்துடன், சிலர் இதனை இயங்காமல் செய்வதில் மறைமுகமாக நிர்வாக தலையீடுகளை புரிந்து வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மீண்டும் ஆலையை இயங்க வைப்பதால் பிரதேசத்தில் 1,200 பேருக்கு நேரடியான வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு வழியமைக்க கூடியவாறு இருக்கும் என்றும் ஊழியர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இவர்களின் கோரிக்கையை கேட்டறிந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர், ஊழியர்களிடம் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
“அரசாங்கம் அபிவிருத்தியைப் பற்றியும் தொழில்வாய்ப்பு பற்றியும் பேசுகின்றது. 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் எனப் பேசுகின்ற அரசாங்கம், பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்த வாழைச்சேனை காகித தொழிற்சாலை மூடப்பட்டு இருகின்ற சூழ்நிலையில் அதனை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கப் பங்களிப்பு இல்லாமல் தனியாரின் பங்களிப்பின் மூலமாக அரம்பிக்கின்ற வழிமுறைகள் இருக்கின்றபோது, அதனை ஆரம்பிக்காமல் இருப்பதற்கு எவ்விதமான காரணமும் இருக்க முடியாது.
“மறைமுகமாக ஏதும் காரணங்கள் இருந்தால் தவிர நேரடியாக நாங்கள் எல்லோரும் பார்க்க கூடிய அறியக் கூடிய வெளிப்படையான கராணம் எதுவும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.
“நான் மிக விரைவில் தனிப்பட்ட முறையில் பிரதமருடன் பேசி அவரிடம் கடிதம் கொடுத்து, கொரியா நிறுவனம் இங்கு வந்து முதலீடு செய்து இந்த தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு நாங்கள் எடுக்க வேண்டிய சகல நடவடிக்கையையும் விரைவில் எடுப்போம்” என்றார்.