காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு பேரவையால் இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
குறித்த பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னர், அவை ஜனாதிபதிக்கு அனுப்பபட்டு, அவரால் நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதன் பின்னர், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின் விதப்புரையின் மேல், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதியினால நியமிக்கப்படுதல் வேண்டும் என அலுவலக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய நியமனங்களுக்கான அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரைகளைப் பெற்றதிலிருந்து பதினான்கு நாட்களினுள், தவிசாளரையும், உறுப்பினர்களையும் நியமித்தல் வேண்டும்.
குறித்த பதினான்கு நாள் காலப்பகுதியினுள் ஜனாதிபதி அவசியமான நியமனங்களைச் செய்வதற்குத் தவறும் பட்சத்தில், அந்த காலம் முடிவுறும் திகதியிலிருந்து பணியகத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு விதந்துரைக்கப்பட்ட ஆட்கள், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களாக கருதப்படுதல் வேண்டும்.
அத்துடன், தவிசாளராக நியமிக்கப்படுவதற்கு விதந்துரைக்கப்பட்ட பெயர்களின் நிரலில் எந்த ஆளின் பெயர் முதலாவதாகக் காணப்படுகின்றதோ அவர், அலுவலகத்தின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளவராக கருதபபடுதல் வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.