தீவிரம் குறையாத மரியா புயல்: கரீபியன் தீவுகளில் பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

545 0

அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள மரியா புயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை தாக்கியுள்ளது. இந்த புயலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள, ‘மரியா’ புயல், கடும் சூறாவளியுடன், கரீபியன் தீவு நாடுகளில் கரையை கடக்கும் என, அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கரீபியன் தீவு நாடான, டொமினிகாவை, ‘மரியா’ புயல் தாக்கியதில், அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசியதில், பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

டொமினிகாவை தொடர்ந்து டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை புயல் நேற்று தாக்கியது. மணிக்கு, 205 கி.மீ, வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ப்யூர்டோ ரிகோ தீவினில் உள்ள அணை நிரம்பியுள்ளதால், அப்பகுதியில் உள்ள 70 ஆயிரம் பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கரீபியன் தீவுகளில் இதுவரை இல்லாத சேதத்தினை ஏற்படுத்தியுள்ள மரியா புயலுக்கு 25 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் குடியேறி உள்ளனர். புயலின் தாக்கம், இன்னும் முழுவதும் குறையாததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதற்கு முன்பு தாக்கிய இர்மா புயலுக்கு 18 பேர் கரிபியன் தீவில் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment