கமல்ஹாசன்-கெஜ்ரிவால் சந்திப்பில் ஒன்றும் இல்லை: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

463 0

நடிகர் கமல்ஹாசனை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பது இயல்பான ஒன்றுதான் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார், சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி அதன் தொடர் நடவடிக்கையாக டெல்லி செல்கிறோம். அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி 5-ல் ஒரு பகுதியினர் ஒன்றுசேர்ந்து கேட்டுக்கொண்டபடி பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் 98 சதவீதத்துக்கு மேலான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தில் ஒற்றுமை உணர்வோடு பொதுக்குழுவில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவுக்கு வந்தவர்களிடம் கையெழுத்து பெற்று, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளோம். பொதுக்குழு உறுப்பினராக இல்லாதவர், பொதுக்குழுவை கூட்டுவோம் என்று சொல்வது காற்றில் கத்தியை வீசுவதுபோல் இருக்கிறது.

கிளைக் கழகம் முதல் தலைமை கழகம் வரை அனைவரும் இரட்டை இலையை மீட்க வேண்டும் என விரும்புகின்றனர். தற்போது 98 சதவீதத்துக்கு மேல் ஒற்றுமையுடன் இருக்கும்போது நிச்சயமாக எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

நடிகர் கமல்ஹாசனை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பது இயல்பான ஒன்றுதான். இதில் அவர்கள் அரசியல் பேசி இருந்தால் பெரிய அளவில் இருக்காது. இந்த சந்திப்பில் ஒன்றும் இல்லை.

17 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா அரசில் அங்கம்வகித்த தி.மு.க., மண்டியிட்டு தங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய இலாகாக்களை பெற்றது. தி.மு.க. நினைத்து இருந்தால் அப்போதே காவிரி பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என மிரட்டி நிறைவேற்றி இருக்க முடியும். இலங்கையில் 1½ லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையும் ஏற்பட்டு இருக்காது.

மத்தியில் மண்டியிட்டு அடிமையாக இருந்து தங்களை வளம் கொழிக்கச் செய்தார்களே தவிர, தமிழகத்தை வளம் கொழிக்கச் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு தற்போது தி.மு.க. பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் எப்படி செயல்பட வேண்டும் என விதிகள் இருக்கிறது. அந்த விதிகளின் கீழ்தான் அனைத்தும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment