போதை பொருட்கள் விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

476 0

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ‘ஸ்டூடியோ 11’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சரத் கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் நிறுவனத்தின் அருகே பலர் பொது இடத்தில் நின்று புகைபிடித்து வருகின்றனர். இதனால் நிறுவன ஊழியர்களும், பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, பொது இடத்தில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்ட சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற போதை பொருட்கள் தமிழகத்தில் எப்படி கிடைக்கிறது? அவை தமிழகத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படுகிறதா? அல்லது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படுகிறதா? என்று அரசு வக்கீலிடம் கேட்டார்.

பின்னர் இந்த விவகாரம் சம்பந்தமாக நீதிபதி எழுப்பிய கேள்விகள் வருமாறு:-

பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு எத்தனை முறை போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்? அதுபோன்று நடத்தப்பட்ட சோதனையின்போது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தால் அவற்றின் அளவு எவ்வளவு?

தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பதுக்கிவைத்து விற்றதாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? இவர்களில் எத்தனை பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்? மாணவர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கம் இருக்கிறதா? என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா?

போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? பொது இடங்களில் புகைபிடித்ததாக எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?

இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தார்.

Leave a comment