விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர்.
இதுவரையிலும் 107 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். சிங்கள பேரினவாத ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளின் மர்ம மரணங்களைக் கண்டித்தும் ! பன்னாட்டு விசாரணையை கோரியும் பேர்லின் நகரில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை 16:30 மணிக்கு நடைபெற்றது. இவ் நிகழ்வில் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும், யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு இதன் பயங்கரவாதத்தினை எடுத்துச் சொல்லவும் பதாதைகளை தாங்கியவண்ணம், இவ்விடையம் சார்ந்து இளையோர்களால் ஒலிபெருக்கியில் கருத்துக்கள் வாசிக்கப்பட்டு, இறுதியில் வெளிவிவகார அமைச்சுக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மௌனமாக அரங்கேறிக்கொண்டிருக்கும் உயிர்வதைகளை,உயிர்க்கொலைகளை நிறுத்த இவ்விடையத்தை யேர்மனியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், மனிதவுரிமை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்துமாறு செயற்பாடுகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.