பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தலைமையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை புறக்கணிப்பதற்கு இலங்கை மருத்துவ சபை தீர்மானித்துள்ளது.
கடந்த 6ம் திகதி குறித்த குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இலங்கை மருத்துவ சபை ஏற்றுக்கொள்ளாத விடயங்களைக் குறித்த குழுவின் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தமையாலேயே இன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையை மருத்துவ சபை புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பில் மருத்துவ சபை கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வரை குறித்த குழுவுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என மருத்துவ சபையின் முகாமைத்துவ குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சட்ட மா அதிபர் திணைக்களம், உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கும் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைக்கு மருத்துவ சபை பங்கேற்கப்போவதில்லை எனக் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவிற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் சங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.