கட்டுநாயக்கவை மினுவாங்கொடைக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு

401 0

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க நீதிமன்ற அதிகார பிரதேசம் என்பவற்றை நீர்கொழும்பு நீதிமன்ற அதிகார பிரதேசத்திலிருந்து நீக்கி மினுவாங்கொட நீதிமன்றத்தின் அதிகார பிரதேசத்துடன் இணைத்துக் கொள்வதற்கு எடுத்துள்ள நடவடிக்கைக்கு நீர்கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் இன்று (21) தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இன்று கூடிய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை அச்சங்கம் வெளியிட்டுள்ளது.

கட்டுநாயக்க விமானநிலையம் மற்றும் கட்டுநாயக்க நீதிமன்ற அதிகார பிரதேசம் என்பன கடந்த 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மினுவாங்கொட நீதிமன்ற அதிகார பிரதேசத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்கு எந்தவித அறிவித்தலும் செய்யப்படாமல் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் நடவடிக்கை என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் சங்கம், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த மாற்றத்தினால், பொது மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சரி டீ ஜயநாத் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றத்தினால், குடிவரவு குடியகல்வு மற்றும் குற்றவியல் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வழக்குகள் பாரிய சிக்கலை எதிர் நோக்குகின்றன. கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத்தினாலும், பொலிஸ் போதைப் பொருள் பிரிவினாலும் கைது செய்யப்படும் வழங்குப் பொருட்களை மினுவாங்கொடைக்கு எடுத்துச் செல்ல வேண்டி ஏற்படுகின்றது. இதனால் பாரிய பாதுகாப்புப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டி வருகின்றது.

இதற்காக வேண்டி மக்களின் பணத்தை அதிகளவில் செலவிட வேண்டி வருகின்றது எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment