வெளிமாவட்ட மீனவர்களால் தாம் தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடித் தொழிலைக் கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வடமாகாண மீன்பிடி அமைச்சர் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே போரினால் பேரழிவை சந்தித்த தமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தொடர்பில் மீனவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
வடக்கு மாகாண சபையின் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட கந்தையா சிவனேசன், நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மீனவ சங்க பிரதிநிதிகளுடன் முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தினார்.
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் குறைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் அமைச்சருடன் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்கள் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.