நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்களிப்பை செய்யும் கிராமிய வியாபாரம் மற்றும் பொருளாதாரத்தை பலப்படுத்த அரசாங்கம் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அடுத்த வரவு–செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் எனும் தொனிப்பொருளில் ஆசிய கடன் தொழிற்சங்க மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பித்த நிலையில் அதில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் வளர்ச்சியிலும் அதன் பொருளாதார மேம்பாட்டிலும் அதன் மேல்மட்ட வர்க்க அபிவிருத்தியை மாத்திரமே கருத்தில்கொள்ள முடியாது. கடந்த காலங்களில் நாட்டின் ஒரு குறித்த நபர்களிடம் மாத்திரமே நிதி இருந்தது. அவர்களின் தலையீட்டில் மாத்திரமே காணப்பட்டது. எனினும் நாம் இன்று நாட்டின் கீழ் மட்ட பொருளாதார நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அதற்கான முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
கிராமிய பொருளாதாரம் இந்த நாட்டின் பிரதான பங்கினை வகிக்கின்ற போதிலும் அதனை கருத்தில் கொண்டு நாம் செயற்படுவதில்லை. எனினும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இது பாரிய பங்களிப்பினை செய்கின்றது. அரச துறையினை மாத்திரம் கருத்தில்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அதேபோல் தனியார் துறையினை கருத்தில் கொண்டும் எம்மால் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது.
இந்த இரண்டு துறைகளின் இணைந்த செயற்பாடுகள் மூலமே நாம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். அதேபோல் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரித்தலும் அதன் மூலமான முதலீடுகளை அதிகரிப்பதுமே அவசியமானதாகும். இதில் பிரதான அங்கமான கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அதன் மூலமாக நகருக்கான அபிவிருத்தியை கையாள்வதே எமது தேசிய அரசாங்கத்தின் நோக்கமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கிராமிய அபிவிருத்தி திட்டத்தினை உறுதியாக முன்னெடுத்து செல்ல புதிய கொள்கைகளை நாம் வகுத்து வருகிறோம். கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக எதிர்வரும் வரவு–செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
சணச கிராமிய வங்கிகளின் மூலமாக பொதுமக்களுக்கான நிதி உதவிகளை வழங்குதல், பிரதான வங்கிகளில் குறைந்த வட்டி வீதத்திலான கடன் உதவிகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வரு
கின்றோம். நாட்டில் பிரதான மேல் தல வியாபாரத்தை பலப்படுத்தும் அதேநிலையில் மத்திய – சிறிய வியாபாரத்தையும், கிராமிய வியாபாரத்தையும் பலப் படுத்துவது பிரதானமாகும். கிராமிய அபிவிருத்தி திட்டங்கள், உற்பத்திகள் நாட்டின் வருவாயில் பாரிய உதவியினை செய்கின் றது என்றார்.