மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் நாளை சட்டமா அதிபர் தரப்பினரால் குறுக்கு விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின் கோரிக்கைக்கு அமைவாக ஆணைக்குழு இந்த குறுக்கு விசாரணைகளை நடத்த சம்மதித்ததுடன் அதுவரை ஆணைக்குழு நடவடிக்கைகளையும் ஒத்திவைத்தது.
பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று இரண்டாவது நாளாகவும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளித்தார். நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பமான ஆணைக் குழுவின் விசாரணைகளில் தனது சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் நெறிப்படுத்தலில் சுமார் 10 நிமிடங்கள் அர்ஜுன மகேந்திரன் சாட்சியம் அளித்த பின்னர் சாட்சியளிப்பு நிறைவுக்கு வந்தது.
இச் சாட்சியத்தின் போது, பிணைமுறி ஏலம் தொடர்பில் அர்ஜுன அலோசியஸுக்கு தான் எந்த வகையிலும் உதவி செய்யவில்லை எனவும், மத்திய வங்கியின் எந்த ஒரு அதிகாரியையும் தான் அவ்வாறு உதவிசெய்ய வற்புறுத்தவில்லை எனவும் அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளித்தார்.
இந்த சாட்சியத்தின் பின்னர், மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்களில் ஒருவரான சமரசிறி சார்பில் ஆணைக்குழுவில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ டி சில்வா குறுக்கு விசாரணைகளை தொடங்கினார். எனினும் அர்ஜுன அலோசியஸின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ஏ பிரேமரத்ன, பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன சட்டத்தரணி ஆகியோர் தமக்கு குறுக்கு விசாரணைக்கு அவசியம் இல்லை என அறிவித்தனர்.
இதனையடுத்து குறுக்கு விசாரணை செய்யும் பொறுப்பு ஆணைக்குழுவுக்கு உதவும் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாரப்படுத்தப்பட்டது. இதன்போது விசேட வாதம் ஒன்றினை முன்வைத்த பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, அர்ஜுன மகேந்திரனிடம் குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் நாளை வெள்ளிக்கிழமை அந்த குறுக்கு விசாரணைகளை செய்வதாகவும் அறிவித்தார்.
அர்ஜுன மகேந்திரனின் சாட்சியத்தை மட்டுமல்லாது இதற்கு முன்னர் பலர் வழங்கிய சாட்சியங்கள், ஆவணங்களை பரிசீலித்து விபரமான குறுக்கு விசாரணைகள் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ள நிலையில் இந்த கால அவகாசத்தை கோருவதாக அவர் குறிப்பிட்டார். எனினும் இதற்கு அர்ஜுன மகேந்திரனின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா எதிர்ப்பு வெளியிட்டார். தமது தரப்பு சேவை பெறுநரான அர்ஜுன மகேந்திரன் உண்மையை கூறிய நிலையில், குறுக்கு விசாரணைக்கு அவசியம் இல்லாததால் சட்டமா அதிபர் சதிசெய்ய கால அவகாசம் கோருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது ஆணைக்குழு உறுப்பினரான நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன, சட்டமா அதிபர் திணைக்களம் ஆணைக்குழுவுக்கு உதவுவதற்காகவே செயற்படும் நிலையில், அவர்கள் பாரிய கோவைகளை ஆராய வேண்டும் எனவும் அதற்கு கால அவகாசம் வழங்குவது நியாயமானது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து ஆணைக் குழுவின் தலைவரான நீதியரசர் சித்ரசிறி, ஏனைய உறுப்பினர்களான நீதி யரசர் பிரசன்ன ஜயவர்தன, ஓய்வுபெற்ற கணக்காய் வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகி யோருடன் ஆலோசித்துவிட்டு குறுக்கு விசாரணை களை நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத் தார். அதன்படி இன்று ஆணைக்குழுவின் விசார ணைகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.