காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க அனுகூலங்களும் கிடைக்கப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அலுவலகத்தை அரசாங்கம் நினைத்திருந்தால் உடனடியாக நியமித்திருக்க முடியும்.
தற்போது மனித உரிமைகள் மாநாடு இடம்பெறுகின்ற நிலையிலேயே குறித்த அலுவலகத்தை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அலுவலகத்தின் கிளைகள் எப்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உருவாக்கப்படும் என்பது தெரியவில்லை.
எவ்வாறாயினும், இந்த அலுவலகம் காணாமல் போனவர்களின் பெயர் விபரங்களைப் பதிவு செய்து, அவர்களுக்கான காணாமல் போனவர்கள் சான்றிதழை வழங்கும் பணிகளை மாத்திரமே செய்யவுள்ளது.
இது காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகள் எதனையும் நடத்தாது.
எனவே இதன் ஊடாக குறிப்பிடத்தக்க அனுகூலங்கள் எவையும் கிடைக்கப் போவதில்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.