ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் கவுதமன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கூட்டத்தில், இயக்குனர் கவுதமன் கலந்துகொண்டார். கூட்டத்தில் கச்சத்தீவு, இலங்கை தமிழர் பிரச்சினை, ‘நீட்’ போன்ற பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்தார். ‘நீட்’ குறித்து அவர் பேசியதாவது:-
வளர்ச்சி அடைந்த பல மொழிகளையும், பல தேசிய இனங்களையும் கொண்ட இந்தியாவில் ஒரே ஒரு தேசிய இனத்தின் தாய்மொழியான இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக உள்ளது என்பது ஐ.நாவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு கூட்டுறவு ஒப்பந்தத்துக்கு எதிரானது.
இந்தநிலையில் இந்திய அரசு எங்கள் தமிழ் பிள்ளைகளின் உயர்கல்வி உரிமையையும் பறித்து எடுக்கிறது. நீட் என்ற நுழைவுத் தேர்வு வழியாக தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கையை இந்திய அரசு எடுத்துக் கொண்டு விட்டது. இந்திய அரசின் பாடத்திட்டம் வேறு, தமிழக அரசின் பாடத்திட்டம் வேறு. தமிழ் வழி பள்ளியில் படித்து 1,200-க்கு 1,176 மதிப்பெண் எடுத்த தமிழ் மாணவி அனிதாவால், நீட் தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாததால் மருத்துவ கல்லூரியில் சேரும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மனமுடைந்த அவர் 1.9.2017 அன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதா போல் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பை இந்திய அரசு தடுத்துவிட்டது.இவ்வாறு அவர் பேசினார்.