தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் நுழைய விடமாட்டோம் என வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
மன்னர் சரபோஜியின் 240-வது பிறந்தநாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா தஞ்சை சரஸ்வதிமகால் ஆய்வு மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் துரைக்கண்ணு பரசுராமன் எம்.பி. கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு அரண்மனையில் உள்ள மன்னர் சரபோஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் வைத்திலிங்கம் எம்.பி.யிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும் பின்வருமாறு:-
கேள்வி: தற்போது 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து அறிவித்தார். உடனே அவர்களது இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றபோது அவரது பதவி பறிக்கப்பட்டது. அவரது இடத்தை காலிஇடமாக அறிவிக்க 48 நாட்கள் ஆகின. இப்போது உடனே அறிவிக்க காரணம் என்ன?
பதில்: சபாநாயகர் கெஜட் மூலம் அறிக்கை வெளியிட்டு காலி இடங்களாக அறிவித்துள்ளார்.
கேள்வி: எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்கு அரசு பணத்தை வீணடிப்பது மற்றும் அரசியல் நோக்கம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்: எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது சமூக போராளியான பெரியாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடினார். அதுபோல எம்.ஜி.ஆர். மக்களுக்கு சத்துணவு திட்டம் போன்ற நல்ல திட்டங்களை அறிவித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். எனவே அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் என்ன தவறு உள்ளது.
கேள்வி: தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏ.க்கள் கோர்ட் உத்தரவு வரும் வரை சட்டசபைக்கு வருவார்கள் என்று தினகரன் கூறியுள்ளாரே?
பதில்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் பேரவைக்குள் நுழைய முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. 18 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் எப்படி வருவார்கள் என்று பார்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.