காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வில் இழுக்க முயற்சியா? என்பதற்கு சு.திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எச்.வசந்தகுமார், விஜயதாரணி, பிரின்ஸ் உள்பட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் சு.திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் நலன் கருதியும், விவசாயிகள் நலன் கருதியும் சுப்ரீம் கோர்ட்டு தந்த அறிவுறுத்தலின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜனதா அரசாங்கம் தமிழகத்துக்கு துரோகம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை ரத்து செய்திருப்பது, ஜனநாயக ரீதியில் தவறு. சபாநாயகர் எடுத்த முடிவுகள் பல மாநிலங்களில் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டு இருக்கிறது. எனவே நீதிமன்றத்தின் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்று நம்புவோம். சென்னை ஐகோர்ட்டின் இறுதி முடிவு வந்தால் தான் மேல் நடவடிக்கை இருக்கும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருக்கிறது. எதிர்காலத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால் சாரணர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் எச்.ராஜாவுக்கு நடந்த நிலை தான் அவர்களுக்கு ஏற்படும்.
காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல் முடிவடைந்ததும் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேச உள்ளேன். அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சு.திருநாவுக்கரசர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வில் இழுக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?
பதில்:- அ.தி.மு.க. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏறமாட்டார்கள்.
கேள்வி:- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். அதுபோன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வார்களா?
பதில்:- அப்படி இருந்தால் உங்களிடம் தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறும் மாநில சுயாட்சி மாநாடு அழைப்பிதழை சத்தியமூர்த்திபவனில் சு.திருநாவுக்கரசரிடம் தொல்.திருமாவளவன் வழங்கினார்.