அமெரிக்க உளவுத் துறையின்(என்எஸ்ஏ) கம்ப்யூட்டர் ரகசியங்கள் மீண்டும் வெளியிடப்பட்டது அமெரிக்க உளவு நிறுவனங்களை கவலையடைச் செய்துள்ளது. இதன் பின்னணியில் ரஷ்யா செயல்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்க அரசுத் துறையின் கம்ப்யூட்டர் சர்வர்களில் இருந்து தகவல் திருடப்பட்டு, அதன் ரகசியங்கள் எல்லாம் கடந்த 2010ம் ஆண்டு முதல் அம்பலமாகி வருகிறது. இச்சம்பவத்துக்குப் பின் அமெரிக்க அரசு பல மில்லியன் டாலர் செலவழித்து தனது கம்யூட்டர் சர்வர்களை பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில் என்எஸ்ஏ அமைப்பின் ரகசிய கம்ப்யூட்டர் குறியீடுகள் மீண்டும் வெளியாகியுள்ளன. இவையெல்லாம் மற்ற நாடுகளின் அரசுத்துறை கம்யூட்டர் நெட்வொர்க்குக்குள் நுழைய என்எஸ்ஏ பயன்படுத்திய கம்ப்யூட்டர் குறியீடுகள் என கூறப்படுகிறது. ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளின் கம்ப்யூட்டர் சிஸ்டத்துக்குள் நுழைய என்எஸ்ஏ உருவாக்கிய கம்ப்யூட்டர் குறியீடுகள்தான் என கூறியுள்ளன.
இதுகுறித்து ஸ்னோடென் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘இந்த வெளியீட்டுக்கு ரஷ்யா காரணம் போல் தெரிகிறது. அமெரிக்க ஜனநாயக கட்சிக்கு நிதி திரட்டும் அமைப்பான டிஎன்சி ஆவணங்களை திருடிய வழக்கில், ரஷ்யாவுக்கு தடை விதிப்பது பற்றி அமெரிக்க அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா, அமெரிக்க உளவுத் துறையின் ரகசியங்களை வெளியிட்டிருக்கலாம்’’ என கூறியுள்ளார்.