மாகாண சபைத் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படவேண்டியது அவசியமாகும்,ஆனாலும் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பிலான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்வரை ஏனைய தேர்தல்களை நடத்தி அதற்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு நேற்று காலையில் கூடியது. இதன் போது 20ஆம் அரசியல் சாசன திருத்தம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன் போது உரையாற்றிய சமபந்தன்,
“அரசாங்கம் எந்த விதத்தில் இவற்றை கையாளப்போகின்றது என்பது எமக்கு தெரியவில்லை, எனினும் இன்று மாகாணசபை தொடர்பிலான சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்கள் கூடி இந்த சட்டமூலத்தை விவாதத்திற்கு கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது, இதில் மாகாணசபை முறைமை தொடர்பில் சில திருத்தங்கள் செய்ய அரசாங்கம் முயற்சிக்கலாம், இதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சில திருத்தங்கள் செய்யவுள்ளமை உறுதியாக தெரிகின்றது.
நாம் அறிந்த வகையில் இந்த திருத்தங்கள் மாகாணசபை மற்றும் பாராளுமன்ற, உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஏற்ற வகையில் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை கொண்டுவர எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமாக இருந்தால் சில சமயம் தேர்தல்களை பிற்போட வேண்டிய நிலைமை உருவாகும். புதிய முறைமை கொண்டுவரப்படுமாக இருந்தால் அதனை சரியாக நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை.
குறிப்பாக இப்போது மூன்று மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும். குறிப்பாக அதன் கால எல்லை முடியும் நிலையில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கலைக்க வேண்டும். ஆகவே இது குறித்து ஒரு சிக்கல் நிலைமை உள்ளது.
அதேபோல் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரசியல் அமைப்பு சபை கூடி தனது இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பிக்க உள்ளார். அந்த அறிக்கையும் ஆறு உப குழுக்களின் அறிக்கையும் அரசியல் அமைப்பு சபையில் விவாதத்திற்கு எடுக்கப்படும். அதன் பின்னர் அரசியல் சாசனம் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்துடன்ள மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்படுவது மட்டும் அல்லாது சர்வசன வாக்கெடுப்பின் மூலமாகவும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.
அனைவரும் ஒத்துழைத்து ஒரு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க வேண்டும் என்பது பிரதமரது நிலைப்பாடாக உள்ளது. இதில் சகல கட்சிகளும் தமது நிலைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர். நாங்களும் எமது நிலைப்பாட்டை சமர்ப்பித்துள்ளோம்.
நாம் அம்பாறை மாவட்டத்தை 24 ஆம் திகதி கூட்டம் நடத்தவுள்ளோம். இதன்போது கிழக்கு மாகாணசபையில் எமது நிலைப்பாடு தொடர்பில் தெரிவிக்கப்படும். மாகாணசபை தேர்தல் உரிய திகதியில் இடம்பெற வேண்டும். அது நடத்தப்படாது விட்டால் மக்களின் ஜனநாயகத்தை பாதிக்கும் வகையில் அமையும். அதே சமயம் அனைத்து தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதில் பல நன்மைகள் உள்ளன. தேர்தல் முறையாக இடம்பெற வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் துஷ்பிரயோகம் செய்யாது நடந்துகொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தமது ஆதிக்கத்தை தக்க வைக்க அரசாங்கம் மோசமாக நடந்துகொண்டமை தெரிந்ததே.
ஆகவே ஒரே தினத்தில் தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் அரசாங்கத்தின் செல்வாக்கை தடுக்க முடியும். அதேபோல் ஒரு அரசியல் சாசனம் மூன்றில் இரண்டுடன் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு மக்களின் அங்கீகாரத்தை பெறும் சூழல் உருவாக்க முடியுமாக இருந்தால் அந்த சந்தர்ப்பத்தில் வேறு தேர்தல்களை நடத்தி அதன் முடிவுகள் சர்வசன வாக்கெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் விரும்பவில்லை.
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் நிலையில் முடிவுகள் எவ்வாறு வரும் என்பதை எம்மால் கூற முடியாது. அந்த முடிவுகள் சர்வஜன வாக்கெடுப்பில் ஒரு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதே எமது கருத்தாகும். அதன் அடிப்படையில் நாங்கள் சிந்திக்காது இருக்க முடியாது. ஆகவே குழப்பங்களை ஏற்படுத்த கூடாது என்பதை நாம் வலியுறுத்திவருகின்றோம். ஆனால் விரைவில் தேர்தல் இடம்பெற வேண்டும். அது எமது நிலைப்பாடு. தேர்தலை சந்திக்க நாம் தயாராக உள்ளோம். அதேபோல் எமது முக்கிய குறிக்கோளானது அரசியல் சாசனத்தை கொண்டுவர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதனை குழப்பும் வகையில் எந்த நகர்வுகளும் அமையக்கூடாது.
20 ஆம் திருத்தத்தை எதிர்க்க இரண்டு காரணிகள் இருந்தன. ஒன்று மாகாணசபை கலைக்கும் திகதி பாராளுமன்றம் தீர்மானிக்கும், மாகாணசபை கலைக்கப்படுமாக இருந்தால் அந்த அதிகாரத்தை பாராளுமன்றம் கைப்பற்றும் என இருந்தது. இவை இரண்டையும் நாம் விரும்பவில்லை. அதனால் தான் எதிர்த்தோம். அவ்வாறான நிலையில் நாம் அரசாங்கத்துடன் பேசினோம் அப்போது இவை உள்ளடக்கப்படாது என அரசாங்கம் எமக்கு வாக்குறுதி வழங்கியது. அதற்கமைய நாம் ஆதரித்தோம். எம்மை பொறுத்த வரையில் அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும் வரையில் எவ்விதமான தேர்தலும் இடம்பெறக் கூடாது. அவ்வாறு இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளின் மூலமாக இதற்கு பாதகமாக அமையும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் தான் நாம் ஆதரித்தோம். வடமாகாண சபையும் இதனை காரணமாக வைத்தே வடமாகாணசபை 20 ஆம் திருத்தத்தை நிராகரித்தது. ஆனால் மாற்று திருத்தம் வந்தால் பரிசீலிப்பதாக கூறினார்கள்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றால், அதன் மூலமாக எமக்கான நோக்கங்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கூடுதலான அரசியல் சக்திகளின் ஆதரவு எமக்கு அவசியமாகின்றது. அகவே அவர்களை குழப்பாது எமது காரியங்களை நாம் சாதித்துக்கொள்ள வேண்டும். நிதானமாகவும், அமைதியாவும் நாம் செயற்பட வேண்டும். ஆகவே சில சந்தர்ப்பங்களின் நாம் மௌனம் காக்க வேண்டிய தேவை உள்ளது. எமது நடவடிக்கைகளில் இந்தியாவின் அக்கறை இல்லையென கூற முடியாது. ஆனால் அதை தக்க வைக்க எமது தரப்பும் செயற்பட வேண்டும். 13 ஆம் திருத்தம் ஒரு ஆரம்பம், இது தீர்வு இல்லை, அதை தீர்வாக ஏற்றுகொள்ளப் போவதும் இல்லை. ஆனால் அதிகார பகிர்வு என்பதை 13 ஆம் திருத்தும் மூலமே முதல் முதலில் அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை மறந்துவிடக்கூடாது. ஆனால் அதன் பின்னர் அரசாங்கத்தின் தீர்மானங்கள் 13 ஆம் திருத்ததிற்கு அப்பால் செல்கின்றது. ஆகவே நாம் 13 ஆம் திருத்தத்தை மீண்டும் ஆதரிக்க முடியாது. புதிய அரசியல் அமைப்பின் இறுதி எவ்வாறு என்பதை நாம் கூற முடியாது. இடைக்கால அறிக்கையில் அதிகார பகிர்வு தோற்பில் சில கோட்பாடுகள் உண்டு. அதன் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்றால் அதி 13 ஆம் திருத்தத்திற்கு அதிகமான அதிகார பகிர்வை கொண்டுவரும் என நம்புகின்றோம்.
எங்களைப் பொறுத்தவரையில் நாம் எந்தத் தீர்வையும் ஏற்கப்போவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாத எதையும் தீர்வாக ஏற்றுகொள்ள நாம் தயாராக இல்லை. இது உறுதியானது. அரசியல் அமைப்பு குறித்து இறுதியில் மக்களிடம் ஆலோசித்து தீர்மானத்தை தெரிவிப்போம். ஆனால் இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது. அதை நிராகரிக்கக் கூடாது. இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு ஏற்ற வகையில் வாய்ப்புகளை உருவாக்க எம்மாலான முயற்சிகளை முழுமையாக நாம் எடுத்து வருகின்றோம். ஜனாதிபதி, பிரதமர் தமது உறுப்பினர்களை முறையாக வழிநடத்தி தீர்வை உருவாக்க முயற்சித்தால் ஒரு நியாயமான தீர்வு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அரசியல் அமைப்பு சொல் பிரயோகத்தில் தங்கியில்லை, உள்ளடக்கத்தில் தான் இவை தனியுள்ளது. நாம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளோம். தீர்வை தரவில்லை என்றால் அதற்காக எமது மக்களை நாம்விற்க முடியாது. இது அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும்”என தெரிவித்தார்