பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் ராணுவத்தின் பங்கு எதுவும் இல்லை என பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. இதன்படி விசாரணை நடந்து வருகிறது.நவாஸ் ஷெரீப்பின் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திய இந்த வழக்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கு இருப்பதாக அந்நாட்டில் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான், பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குழு ,பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த பதவியாக கருதப்படும் ராணுவ தளபதி பொறுப்பில் இருக்கும் ஜெனரல் பாஜ்வாவை சந்தித்தது. ராணுவ தலைமையகத்தில், நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. பாதுகாப்பு நடைமுறை, ராணுவ நீதிமன்றம், பாதுகாப்பு பட்ஜெட், அமெரிக்காவுடனான உறவு, இந்தியாவுடனான பதட்டம், ஆப்கானிஸ்தான் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சிவில் ராணுவ தொடர்புகள் பற்றி ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா, நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவித்ததாக பாராளுமன்ற குழுவில் இடம் பெற்ற ஒருவர் கூறியதாக பாகிஸ்தானின் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், தனக்கு ஜனநாயகத்தின் மீது ஆர்வம் உண்டு எனவும் பாகிஸ்தானின் முந்தைய பிரதமரை விட தற்போதையை பிரதமர் சிறப்பானவராக உள்ளதாகவும் பாஜ்வா கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக , நவாஸ் ஷெரீப், தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கான சதி 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருந்ததாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், ராணுவ தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.