ஆசிரியர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி சென்று மாணவன் தலையில் தாக்கி அவன் இறந்த சம்பவம் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அவரது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகில் உள்ள சித்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஸ்வேஷ்வரன் (வயது 13).
விட்டம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த விஸ்வேஷ்வரன் கடந்த 16-ந் தேதி அங்குள்ள விடுதி மைதானத்தில் சக மாணவர்களுடன் கபடி விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அருகில் ஆசிரியர் குப்புசாமி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். ஆசிரியர் குப்புசாமி ஒரு பந்தை அடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரது கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி சென்று விஸ்வேஸ்வரன் பின் தலையில் வேகமாக தாக்கியது. இதில் நிலை குலைந்த விஸ்வேஸ்வரன் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தான்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனில்லாமல் நேற்று மூளை சாவு அடைந்த மாணவன் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தான். இதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.
ஆசிரியர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி சென்று மாணவன் தலையில் தாக்கி அவன் இறந்த சம்பவம் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அவரது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மொளசி போலீசார் ஏற்கனவே ஆசிரியர் குப்புசாமியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.