சசிகலாவை சிறையில் சந்திக்க 21 எம்.எல்.ஏ.க்கள் முடிவு: அனுமதி கேட்டு கடிதம்

31186 0

தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலை பற்றி எடுத்து கூற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இணைந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதுமட்டுமின்றி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்த சூழலில் தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலை பற்றி எடுத்து கூற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக பெங்களூர் சிறைத்துறை சூப்பிரண்டுக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.ஆனால் சிறை விதிப்படி ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் சசிகலாவை சந்திக்க முடியாது என்று கூறி விட்டனர். 21 பேரும் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டும் என்றால் உள்துறை செயலாளரின் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்திப்பதிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

Leave a comment