ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அடைவதற்கு அவர்களின் விருப்பப்படி பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றே நிரந்தர அரசியல் தீர்வாக அமையும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு, ஒத்துழைக்க இலங்கை அரசு தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருவது கவலைக்கு உரியதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 36-வது மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசிய மனித உரிமைக்குழு தலைவர் இலங்கை அரசின் மெத்தனத்தைச் சுட்டிக்காட்டி, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணையை எந்த நாட்டில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. மனித உரிமை மீறலிலும், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கையோ அல்லது அதற்கு காரணமானவர்கள் மீது பொறுப்பு நிர்ணயம் செய்வதற்கோ, இதுவரை இலங்கை அரசு நம்பகமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும், தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இலங்கை ராணுவத்தினர் வெளியேறவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
போரின்போது காணாமல் போன தமிழர்களை கண்டுபிடிப்பது, போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்துவது, இனப்படுகொலைக்கு காரணமானோரை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிப்பது, இலங்கை ராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்களை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் இலங்கை அரசு தான்தோன்றித்தனமாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மதிக்காமலும் செயல்பட்டுக் கொண்டிருப்பது, ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அக்கிரமமும், அநீதியுமாகும்.
ஆகவே, ஈழத்தமிழர்கள் இலங்கையில் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், உரிய உரிமைகளுடனும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கவும், ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அடைவதற்கும், அவர்களின் விருப்பப்படி பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றே நிரந்தர அரசியல் தீர்வாக அமையும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது.
ஈழத்தமிழர்களின் கவுரவமான வாழ்க்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் போதிய அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுத்து, போர்க்குற்றங்களில் ஈடுபட்டோர் மீதான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று 36-வது மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் மத்திய அரசை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.