மாந்தை மேற்கு பிரதேசத்தில் சமூர்த்தி பயனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்……….(காணொளி)

661971 0

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாழ்வின் எழுச்சி திட்ட பயனாளிகள் பலரது சமூர்த்தி கெடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதோடு, அவர்களின் பெயர் விபரங்கள் நீக்கப்பட்டமையினை கண்டித்து, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி பயனாளிகள் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 36 கிராம அலுவலகர் பிரிவில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 981 குடும்பங்கள் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் ஊடக சமூர்த்தியை பெற்றுக்கொண்ட நிலையில் தற்போது சுமார் 900 வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகளுக்கு உதவித்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் பெயர் விபரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்கான சமூர்த்தி கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகள் தம்மை பட்டியலில் இருந்து நீக்கியதை கண்டித்து இன்று மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட 36 கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகள் ஒன்றிணைந்து நெடுங்கண்டல் சந்தியில் இருந்து பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தை நோக்கிச் சென்றனர்.

பின்னர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்ததோடு, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சமூர்த்தி பயனாளிகளை மீளாய்வு செய்து மீண்டும் இணைத்து சமூர்த்தி கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.