தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

810 0

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.ரீ.வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தரப்பின் சார்பில் மேலதிக மனுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினகரனுக்கு ஆதரவாக செயற்படும் 18 சட்டமன்ற உறுப்பினர்களிடம், இது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க கூறி தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலினால், அறிவித்தல் அனுப்பபட்டிருந்தது.

அந்த அறிவித்தலை ஏற்க முடியாது எனத் தெரிவித்து தினகரன் ஆதரவு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம், குறித்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, அவர்கள் அனைவரையும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

இது சட்டத்திற்கு முற்றிலும் எதிரான எனத் தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலதிக மனுவொன்று அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா திராவிட அரசு மீது தாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை என்றும், முதலமைச்சர் மீது மட்டுமே நம்பிக்கை இழந்துள்ளதாகவும் அவர்கள் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment