சென்னை மழை சேதத்துக்கு ஆக்கிரமிப்புகளே காரணம்

413 0

201608180859100195_Parliament-Committee-Files-Report-On-Chennai-Floods_SECVPFசென்னை மழை சேதத்துக்கு ஆக்கிரமிப்புகளே காரணம் என்று பாராளு மன்ற நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் வெள்ள பாதிப்புகளை சீரமைக்க தேவையான நிதி உதவியை மத்திய அரசு உடனே அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பெய்த கன மழை மற்றும் அதை தொடர்ந்து வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாராளுமன்ற நிலைக்குழு 12-ந்தேதி டெல்லி மேல்-சபையில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

பி.பட்டாச்சாரியா எம்.பி. தலைமையில் சுப்பிரமணியசாமி, டாக்டர் வி.மைத்ரேயன், டி.ராஜா உள்ளிட்ட 10 மேல்-சபை எம்.பி.க்களும், பி.நாகராஜன் உள்ளிட்ட 21 எம்.பி.க்களும் இந்த நிலைக்குழுவில் உள்ளனர். இந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னையில் கடந்த ஆண்டின் இறுதியில் பெருவெள்ளம் எதிர்பாராது பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டது ஆகும். இந்த வெள்ளம் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கடற்கரையோர பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

தமிழக அரசு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வெள்ளத்தால் 470 பேர் இறந்துள்ளனர். 12 ஆயிரம் கால்நடைகள் தொலைந்து போனது. லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். 5 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. இது தவிர பொது சொத்துகளுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டது. சுமார் 3.83 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அழிந்தன.

அடர்த்தியாக பெய்த மழை, நீர்நிலைகளின் கொள்ளளவுக்கு மேல் தண்ணீர் பெருக்கு, ஏரிகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் வடிகால்களில் அடைப்புகள் ஆகியவை சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு காரணமாக அமைந்தன. இதனால் பல இடங்களில் மக்கள் வசிக்கும் இடங்கள் தீவுகள் போல தொடர்பு துண்டிக்கப்பட்டு பல நாட்கள் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

நவம்பரில் பெய்த பெருமழையை தொடர்ந்து டிசம்பரில் பெய்த கனமழை நிலைமையை மேலும் மோசமாக்கியது. சென்னை நகரின் நீர் வடிகால் முறையும் வெள்ளத்துக்கு பிரதான காரணமாக அமைந்தது. கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு ஆகிய சிற்றாறுகளின் நீர் படுகை மிகவும் சிறியவை. நீளம் மிகவும் குறைந்த இந்த சிற்றாறுகள் வெறும் சில நூறு கன அடி தண்ணீரை மட்டுமே வெளியேற்றும் வகையில் உள்ளன. பெருவெள்ளத்தால் இந்த சிற்றாறுகள் 29 ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றும் சூழ்நிலை ஏற்பட்டது. இது மிகப்பெரிய பேரிடரை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

சென்னை நகரின் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அடையாறு கரையோரத்தில் 839 மீட்டர் பரப்பளவில் 4,046 வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே சென்னையில் நீர்நிலைகளை யாரும் ஆக்கிரமிக்காத வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கழிவுநீர் வடிகால்களும் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் வருங்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து பேரிடர் மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற பேரிடர்கள் நிகழும்போது வேண்டிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் வகையில் தயாரான நிலையை உருவாக்க வேண்டும்.

பெருவெள்ளத்தால் தமிழகத்துக்கு பெருமளவில் பலவகையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு இந்த இழப்பை சரிகட்டும் வகையில் மாநில அரசு கேட்டுக்கொண்டபடி வேண்டிய நிதி உதவியை தாமதம் இன்றி விரைவில் வழங்க இந்த குழு பரிந்துரை செய்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநில அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.