மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் கைத்தொலைபேசித் தரவுகள் காணாமல்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆணைக்குழுவில் அறிவித்துள்ளனர்.
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், அர்ஜுன் மகேந்திரன் இன்று முற்பகல் முன்னிலையானார்.
அர்ஜுன் மகேந்திரனிடம் சாட்சியம் பெறும் தீர்மானமானது கடந்த 13ஆம் திகதி ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவரின் சாட்சியம் மிகவும் அத்தியாவசியமானது என அறிவித்து, ஆணைக்குழு விடுத்த அழைப்பாணைக்கு அமைய அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
இந்த நிலையில், அவரின் இரண்டு கைத்தொலைபேசிகள் ஆணைக்குழுவின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த கைபேசிகளில் கடந்த 11 மாதங்களின் தரவுகள் காணாமல்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் அர்ஜுன் அலோஸியஸுடன் கலந்துரையாடப்பட்டதை பெப்பர்ச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவன மேலாளர் கசுன் பலிசேன இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.