ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களுடன் ஜனாதிபதி டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார்.
ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் அவர் இதை வலியுறுத்தினார். இந்த நிலையில் தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு டிரம்ப் முதல் முறையாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகிறார்.
முன்னதாக அவர் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதற்காக தனிப்பட்ட முறையில் உலக தலைவர்களின் கூட்டத்தையும் டிரம்ப் கூட்டியுள்ளார். இதில் இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதுபற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் கூறுகையில், “இந்த கூட்டத்தில் ஐ.நா. சபை தலைவர் ஆண்டோனியோ குட்ரஸ் ஐ.நா.வில் மேற்கொள்ள இருக்கும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என டிரம்ப் கேட்டுக் கொள்வார். ஐ.நா. சபை திறமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்படவேண்டும் என்பதே டிரம்பின் விருப்பம். ஐ.நா. சபையில் அவர் வடகொரியாவின் அணுசக்தி திட்டம் மற்றும் சிரியா நெருக்கடி குறித்து பேசுவார்” என்று தெரிவித்தார்.