எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பது 22-ந்தேதி தெரிந்து விடும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமிக்கு 117 உறுப்பினர்கள் ஆதரவு இல்லை. முதல்-அமைச்சராக அவர் தொடர முடியாது என்று கூறிய பிறகும் கவர்னர் தனது பதவி கண்ணியத்தை காப்பாற்ற தவறி விட்டார். சபாநாயகர் எடுத்த முடிவு ஜனநாயக குரல் வளையை நொறுக்கி உள்ளது. இதற்கு நீதிமன்றம் இருக்கிறது. பதவி நீக்கம் செல்லாது என்று எங்களுக்கு கோர்ட்டில் நீதி கிடைக்கும். சட்டப்படி நாங்கள் வெற்றி பெறுவோம்.
சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடும். எடப்பாடி பழனிசாமி சகாக்கள் வீட்டிற்கு போகும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கிறது. பழனிசாமிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பது 22-ந்தேதி தெரிந்து விடும். கவர்னர்
காலம் தாழ்த்தியதால் தான் இதுபோன்ற ஜனநாயக படுகொலை தற்போது ஏற்பட்டு உள்ளது. நான் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்து கொண்டு இருக்கும் போதே பல சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை தொடர்பு கொண்டு பெரும்பான்மை நிரூபிக்கும் நேரம் வரும் போது துரோக கும்பலுக்கு நாங்கள் யார் என்பதை காண்பிக்கிறோம் என்று கூறி உள்ளனர்.
1987-ம் ஆண்டு சரித்திரம் தற்போது திரும்பி இருக்கிறது. தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். எனக்கு 30 ஆண்டு கால அரசியல் அனுபவம் இருக்கிறது. ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருக்கும் போது நினைத்து இருந்தால் சசிகலா முதல்-அமைச்சராகி இருக்கலாம். ஆனால் பன்னீர்செல்வத்தை சசிகலா முதல்-அமைச்சர் ஆக்கினார்.
சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. உறுப்பினர்களை பார்த்து சிரிக்கிறார் என்று தினமும் என்னிடமும், சசிகலாவிடமும் குறை கூறியதால் தான் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். பதவி இல்லை என்றால் ஓ.பன்னீர்செல்வத்தால் தூங்க முடியாது. அவர்களை பதவியில் இருந்து இறக்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக குரல் கொடுத்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. தற்போது ஏற்பட்டு உள்ள ஜனநாயக படுகொலைக்கு குரல் கொடுத்து உள்ளார்கள். ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வினருக்கும் பொறுப்பு இருக்கிறது. எப்போது தேர்தல் வந்தாலும் எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி. நிச்சயம் வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனாலும், தொப்பி சின்னத்தில் போட்டியிட்டாவது ஆட்சி அமைப்போம். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும். செயற்குழு, பொதுக்குழுவை திருச்சியில் கூட்ட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் நிருபர்களிடம் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-
எங்கள் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம். விரைவில் கட்சியை கைப்பற்றுவோம். எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை ஜனநாயக படுகொலை. அதனை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திப்போம். இந்த நடவடிக்கைக்கு எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் பயப்பட மாட்டார்கள். நீதிமன்றத்தை நாடி இந்த தகுதி நீக்க நடவடிக்கை செல்லாது என்ற அறிவிப்பை பெறுவோம்.
தமிழக கவர்னர், இனிமேலாவது இது உட்கட்சி பிரச்சினை என்று பார்க்காமல், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்்மானம் கொண்டு வந்து, வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தினால் எடப்பாடி அரசு வீட்டு்க்கு அனுப்பப்படும்.
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது என மக்கள் நம்புவார்கள். இல்லையென்றால் மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஏனென்றால் மத்திய அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகரும் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, தமிழக கவர்னரும் துணை போவது தான் வருத்தமாக உள்ளது. எனவே, ஜனாதிபதியும், மத்திய உள்துறை மந்திரியும் எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க தமிழக கவர்னருக்கு அறிவுறுத்த வேண்டும்.
எங்கள் அணியில் 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாமல், மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அது இல்லாமல் எங்களுக்கு ஆதரவான மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் அமைதியாக உள்ளனர். அங்குள்ள (எடப்பாடி பழனிசாமி அணி) அமைச்சர்கள் சிலர் பதவி வெறியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.