எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்தது

247 0

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்து உள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழந்துவிட்டதைத் தொடர்ந்து சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 215 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.

எனவே தற்போதுள்ள 233 எம்.எல்.ஏ. எண்ணிக்கையில் 18 பேரை கழித்தால் 215 எம்.எல்.ஏ.க்கள். உள்ளனர். அந்த எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கும் கட்சி, ஆட்சிக்கான பெரும்பான்மையைப்பெறும்.

அதாவது எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடக்கும் ஆட்சிக்கு 108 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால், அந்த அரசு பெரும்பான்மை பெற்றதாக கருதப்படும்.

ஆதரவு கிடைக்குமா?

சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தும்போது, சபாநாயகரை தவிர்த்துவிட்டால் 116 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆளும் கட்சி வசம் இருப்பார்கள். (இரண்டு பக்கமும் ஒரே எண்ணிக்கையில் ஓட்டுகள் இருந்தால் மட்டுமே சபாநாயகரின் ஓட்டு கோரப்படும்). அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களில் கருணாஸ் மட்டும் டி.டி.வி.தினகரனை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தங்களின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.

எனவே பெரும்பான்மை ஓட்டெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் தற்போது எண்ணிக்கையின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்து உள்ளது.

எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையான 98 (தி.மு.க.-89, காங்கிரஸ்-8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1), ஆளும் கட்சியின் ஆதரவு எண்ணிக்கையை ஒட்டி வருவதால், அரசு அமைதியாக ஆட்சி நடத்துவது என்பது நித்திய கண்டமாகத்தான் இருக்கும். ஒருவேளை அரசுக்குள்ள, சபாநாயகர் நீங்கலான 116 எம்.எல்.ஏ.க்களில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய 3 பேருமே அரசுக்கு எதிராக வாக்களித்தாலும்கூட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 113 எம்.எல்.ஏ.க்களின் வாக்கு அரசுக்கு கிடைத்து, தேவையான 108 வாக்கைவிட அதிகம் பெற்று அரசு தப்பித்துவிடும்.

ஆனால் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அந்த 3 பேர் மீதும் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான உத்தரவை சட்டசபையிலேயே சபாநாயகர் பிறப்பிப்பதற்கும் வழிவகைகள் உள்ளன.

Leave a comment