தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் இன்று நடக்கிறது!

254 0

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அக்கட்சியில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த 18 எம்.எல்.ஏ.க்கள் நேற்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். நேற்று மாலையே அவர்களது 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் உள்பட 88 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

கூட்டத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்கத்தை கோர்ட்டோ அல்லது தேர்தல் ஆணையமோ ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்து என்ன செய்வது? என்பது குறித்து விவாதிக்க இருக்கின்றனர். மேலும், தகுதி நீக்கம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், தாங்களும் கூண்டோடு ராஜினாமா செய்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்க இருக்கின்றனர்.

இதேபோல், தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசரும், 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

கூட்டத்தில் கலந்துகொள்ள அவர்களுக்கு போன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும், தங்களது நிலைப்பாடு என்ன? என்பதை ஆலோசித்து முடிவெடுக்க இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் முடிவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் முடிவை ஒத்தே இருக்கும் என்று தெரிகிறது.

Leave a comment