மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த பீர் திருவிழாவுக்கு அரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் பீர் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலும் அக்டோபர் மாதத்தில் பீர் திருவிழா நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், கோலாலம்பூர் சிட்டி ஹால் அரங்கில் அக்டோபர் 6-7 தேதிகளில் Better Beer Festival என்ற பெயரில் பீர் திருவிழா நடத்த விழா ஏற்பாட்டாளர்கள் அனுமதி கோரி இருந்தனர். உலகில் உள்ள 43 மது தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்த 250 பீர் வகைகள் இந்த திருவிழாவில் இடம்பெறும் என்று செய்திகள் வெளியாகின. இந்த திருவிழாவில் 6 ஆயிரம் பீர் பிரியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திருவிழாவை தடை செய்ய வேண்டும் என பேஸ்புக் உளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கோலாலம்பூர் சிட்டி ஹால் அரங்கில் பீர் திருவிழா நடத்த அனுமதி கேட்டு செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதைமீறி பீர் திருவிழா நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு அதிகாரிகள் இன்று எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, அடுத்த மாதம் 6-7 தேதிகளில் நடைபெறவிருந்த பெட்டர் பீர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இவ்விழா அமைப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.