தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் தொகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 975 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 370 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த இருவார காலமாக நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 975 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 360 க்கும் மேற்பட்டோர் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர்.
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி அங்கு 30 ஆயிரத்து 98 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 27 ஆயிரத்து 53 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 8928 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 685 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5536 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4553 பேரும், திருகோணமலையில் 4594 பேரும், இரத்தினபுரியில் 9817 பேரும் அதிகளவில் டெங்கு நோயாளர்களாக மாவட்ட மட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் சகல பாடசாலைகளுக்கும் இது தொடர்பில் அதிபர்களினூடாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும், பாடசாலை வளாகங்களில் டெங்கு நோய் பரவும் வகையிலான காரணிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும் டெங்கு நோய் பரவும் வகையில் சட்டவிரோதமான முறையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் சகல பிரதேச மட்டத்திலும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் மக்களும் தங்களது சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதுடன் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ச்சியான காய்ச்சல் அல்லது டெங்கு நோய் தொடர்பிலான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.