மியன்மாரிலுள்ள ரோஹிங்ய முஸ்லிம்கள் அகதிகளாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாக இருந்தால், மியன்மார் நாட்டின் கடவுச் சீட்டு பெற்றிருக்க வேண்டும்.
இருப்பினும், ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு வேறு நாடுகளுக்கு செல்வதற்கு வீசா வழங்கப்படுதில்லை. அத்துடன், அவர்களுக்கு செல்லுபடியான கடவுச் சீட்டை மியன்மார் அரசாங்கம் வழங்கி வில்லை.
இவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாயின் சட்ட விரோதமான வழிகளிலேயே வரவேண்டும் என இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வருகை தந்த அகதிகள் எனக் கூறப்படுவோர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ரோஹிங்ய பிரச்சினைக்கு முன்னர் கடந்த ஏப்றல் 20 ஆம் திகதியே வருகை தந்திருத்ததாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில் ஏதாவது கோரிக்கைகள் வருமாயின், அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை என்னவென குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவரிடம் வினவப்பட்டதற்கு,
அது தொடர்பில், வெளிவிவகார அமைச்சுதான் தீர்மானம் எடுக்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.
அத்துடன், மியன்மாரிலிருந்து இலங்கைக்கு வரும் ஏனையவர்களுக்கு எந்தவிதமான தடைகளும் இல்லையெனவும் அப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினமும் (16) நேற்றும் (17) மியன்மாரிலிருந்து பல குழுக்கள் வருகை தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.