கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியிலுள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடுதியில் இரு இளைஞர்கள் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், அது இரு குழுக்களுக்கிடையேயான மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நால்வரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிசிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் ஒருவர் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிசை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரியும், சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரியுமான உப பரிசோதகர் சுமணசிறி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின்போது சந்தேகநபர்கள் நால்வரின் பெயர்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளபோதிலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தையடுத்து பரந்தன் பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டது.
வாள்வெட்டுசம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இராணுவ முகாம் ஊடாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து, குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றது. இத்தேடுதலில் பொலிசாரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.