முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிபாரிசின் பேரில், நேற்றிரவு (16) கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள காணாமல் போனவர்களின் சட்ட மூலம் தொடர்பிலேயே ஜனாதிபதியுடன் இவர்கள் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சட்ட மூலத்தினால் இராணுவத்தினருக்கு அநீதி இழைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியதாக மஹிந்த குழு எம்.பி. பந்துல குணவர்தன இன்று (17) குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியிடமிருந்து சாதகமான ஒரு பதில் கிடைத்ததாகவும், இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது போன்ற ஒரு சமிக்ஞையை ஜனாதிபதி வெளிப்படுத்தியதாகவும் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பந்துல குணவர்தன எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.