எகிப்து முன்னாள் அதிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது

1616 0

எகிப்து நாட்டின் ரகசிய தகவல்களை கத்தார் நாட்டிற்கு விற்ற வழக்கில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மொர்சிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

எகிப்து நாட்டில் கடந்த 2012 நடைபெற்ற முதல் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மொர்சி அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதையடுத்து அவரது ஆட்சி கலைக்கப்பட்டு ராணுவ ஆட்சி நடந்தது.

இவர், பதவியில் இருந்த பொழுது நாட்டின் முக்கிய ஆவணங்களை கத்தார் நாட்டிற்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக அந்நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அதிபர் தேர்தலின்பொழுது மோசடி செய்ததாவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கடந்தாண்டு ஜூன் மாதம், ஆவணங்கள் விற்பனை செய்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் நவம்பர் மாதம், தேர்தல் மோசடி வழக்கிலும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எகிப்து நாட்டில் ஒரு ஆயுள் தண்டனை என்றால் 25 ஆண்டுகள் சிறைதண்டனையாகும்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை எகிப்து நீதிமன்றம் நேற்று விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் அவருக்கு அளித்த ஆயுள்தண்டனையை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இந்த தீர்ப்பு இறுதியானது, இதற்கு பின்னர் மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment