சாரண- சாரணியர் இயக்க தலைவர் தேர்தலில் எச். ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்ற மணிக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சாரணர்- சாரணியர் இயக்க தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சாரண- சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா தேசிய செயலர் எச்.ராஜா தோல்வியடைந்தார்.
தேசிய தலைமை அலுவலக உத்தரவையும் மீறி சாரண, சாரணியர் இயக்க தேர்தல் நடைபெற்றதாகவும், இன்று நடந்த தேர்தல் செல்லாது என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மணிக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு பாரத சாரணர்- சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வாகியுள்ள மணி அவர்களுக்கு வாழ்த்துகள். அதிகார பலத்தை மீறி தொண்டுணர்வு பெற்றுள்ள இந்த வெற்றி மாணவ சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் துணை நிற்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.