வழக்குகளை விரைவாக தீர்த்து வைக்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத்

5773 0

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்த்து வைக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்தின் 125-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

‘‘தமிழகத்தில் மொத்தம் 2.97 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 33,960 வழக்குகளும், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 44,721 வழக்குகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் உள்ளன. அந்த வழக்குகளுக்கு தீர்வு காண, காலக்கெடு நிர்ணயித்து முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதுவே மகிழ்ச்சியான இந்த விழாவில் நாம் நிர்ணயித்துக்கொள்ளும் இலக்காக அமைய வேண்டும்’’ என்றும் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில அரசு விவகாரங்களில் மத்திய பாஜக அரசு ஒருபோதும் தலையிட்டது இல்லை என்று தெரிவித்தார்.

Leave a comment