முதலைகள் குறித்து பயணிகள் எச்சரிக்கப்படுவதில்லை-பிரதேச மக்கள்

223 0

அறுகம் குடாவில் இடம்பெற்ற முதலைத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தச் சென்ற பொலிஸாரிடம், முதலைகள் தாக்கும் அபாயம் இருப்பது குறித்து உல்லாசப் பயணிகளுக்கு அத்துறை சார்ந்த அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்குவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

அறுகம் குடா பகுதியில் நேற்று முன்தினம் (14) நண்பர்களுடன் சென்றிருந்த பிரித்தானிய இளம் ஊடகவியலாளரை முதலையொன்று இழுத்துச் சென்றது. இயற்கை உபாதையைக் கழித்த பின் கைகளைக் கழுவுவதற்காகச் சென்றபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றிருந்தது.

‘ஃபைனான்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் பணியாற்றும் போல் மெக்ளீன் (24) என்ற அந்த இளைஞரது உடல், சேற்றில் புதையுண்டிருந்த நிலையில், கடற்படையினரால் நேற்று (15) காலை கைப்பற்றப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காகச் சென்ற பொலிஸாரிடம், முதலை தாக்கும் அபாயம் இருப்பது குறித்து சுற்றுலாப் பயணிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதற்கு முன் உள்ளூர்வாசிகள் சிலரும் முதலைத் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இதுபற்றித் தெரிந்தும் இங்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கு இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்குவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பொலிஸாரின் முயற்சியால் முதலைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கும் பதாகைகள் அங்கு வைக்கப்பட்டன.

Leave a comment