ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை ; நீதிமன்றம் வழங்கிய தண்டனை

449 0
பிரித்தானியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கனடாவில் வசித்த சுரேன் சிவநாதன் என்ற 32 வயதுடைய ஈழத் தமிழர், பிரித்தானியாவில் கொல்லப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்த தமது பாடசாலை காலத்து நண்பி ஒருவரை பார்ப்பதற்காக அவர் பிரித்தானியா சென்றுள்ளார்.
2017 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மில்டன் கீனஸ் பகுதியில் வைத்து அவர் கொல்லப்பட்டார்.
அவரின் உடலில் 87 காயங்கள் காணப்பட்டதுடன், தலையில் மாத்திரம் 36 காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக, ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு லூட்டன் கிரவுண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கபப்பட்டது.
இதற்கமைய, ஸ்பிரிங்பீல்டைச் சேர்ந்த ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்ற 36 வயதுடையவருக்கும், 17 வயதுடைய இளைஞனுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் ஆயுள்தண்டனையை, குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மற்றவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது இளைஞனின் பெயர் விபரங்களை வெளியிடப்படவில்லை.
எனினும், அவர் 11 ஆண்டுகள் குறைந்தபட்சம் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மூன்றாவது குற்றவாளியான, 24 வயதுடைய, பிரசாந்த் தவராசாவுக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment