தேர்தல்களுக்குத் தயாராகுமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளது கூட்டு அரசின் தலைமைப்பீடம்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவு தொடர்பில் உயர் நீதிமன்றின் விளக்கம் சாதகமாக வராத பட்சத்தில் அதற்கு மாற்றீடாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக் கலாம் என்று உயர்மட்டத்தினர் சுட்டிக்காட்டியதை யடுத்தே அரச தலைமைப்பீடம் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளது.
20ஆவது திருத்தச் சட்டவரைவைக் கைவிடவேண்டிய நிலை ஏற்படுமென சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அரச தலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையிலேயே மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடத்தும் நோக்கிலும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவை அரசு முன்வைத்திருந்தது.
20இற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவு குறித்தான தனது விளக்கத்தை உயர் நீதிமன்றம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அனுப்பிவைத்துள்ளது.
20ஆவது திருத்தச் சட்டவரைவை பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றவேண்டும் எனக் கூறியுள்ளது. பொது வாக்கெடுப்பைத் தவிர்த்து மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் மாத்திரம் 20ஐ நிறைவேற்ற முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பு மீது பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டிவரும் என்பதால் 20ஆவது திருத்தச் சட்டவரைவில் அதை செய்யாதிருப்பதே அரசின் நிலைப்பாடாக இருக்கின்றது.
இந்த மாதத்துடன் ஆயுள்காலம் முடிவடைகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய திகதியில் நடத்தவேண்டும். ஒக்ரோபர் 2ஆம் திகதி வேட்புமனுக்கள் அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு விடுக்கும்.
தற்போதைய அரசமைப்பு, மாகாண சபைகள் சட்டத்தின் பிரகாரம் ஆயுள்காலம் முடிவடைகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைக்க முடியாது. அதைச் செய்யவே அரசு 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்திருந்தது. தற்போது அந்த முயற்சி கைகூடாது என்பதாலேயே தேர்தல் மீது அரசு கவனம் செலுத்தியுள்ளது.