பிச்சை எடுத்த பணத்துடன் பிரதமர் வீட்டுக்கு செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் கைது

425 0

டெல்லியில், பிச்சை எடுத்த பணத்துடன் பிரதமர் வீட்டுக்கு செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம், நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 62-வது நாளாக நீடித்தது.

போராட்டத்தையொட்டி நேற்று முன்தினம் விவசாயிகள் பிச்சை எடுத்தனர். இதில் ரூ.6 ஆயிரத்து 666 வசூல் ஆனது. இந்த பணத்தை பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கு எடுத்துச்சென்று அவரிடம் ஒப்படைக்க விவசாயிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று போராட்டக்குழு தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் ஜந்தர் மந்தரில் இருந்து புறப்பட்டனர். இதனால் அவர்கள் 28 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது ஏற மறுத்த அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அவர்கள் பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அய்யாக் கண்ணு கூறுகையில், ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி நிதி தர மறுக்கிறார். எனவே, நாங்கள் பிச்சை எடுத்த பணத்தையாவது விவசாயிகளுக்கு வழங்குங்கள் என்பதற்காகத்தான் பிரதமர் வீட்டுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றோம்’ என்றார்.

Leave a comment