30 ஆண்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர் சம்பளம் ரூ.92 ஆயிரம் வழங்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க சிறப்பு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இதற்கு முன்னர் 2 முறை விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவதற்கு ஆசிரியர்கள் போராட்டமும் ஒரு காரணம் என்று கருத்து கூறிய நீதிபதி கிருபாகரன், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இழப்பீடு வழங்க சம்பளத்தில் பிடித்தம் செய்ய நேரிடும் என்று எச்சரித்த நீதிபதி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் எவ்வளவு? என்பது பற்றியும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆசிரியர்கள் சம்பளம் குறித்து அதில் தெரிவிக்கப்படடது. குறைந்தபட்ச சம்பளமாக ரூ.26 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரம் வரையில் வழங்கப்படுவதாகவும், 30 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களுக்கு ரூ.92 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட் டிருந்தது.
இன்றைய விசாரணையின்போது புதிய பென்சன் திட்டம் பற்றி நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
பென்சன் திட்டத்தில் அரசின் பங்களிப்பு என்ன? என்பது பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்துக்கு அரசின் நடவடிக்கையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.ஆசிரியர்கள் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் போராடும் முறைதான் சரியில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.பின்னர் வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.