பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் உள்ள எல்லா இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
பொங்கல் பண்டிகை 2018 ஜனவரி மாதம் 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
13-ந் தேதி போகி பண்டிகையும், 15-ந் தேதி மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் போன்ற தமிழர்களின் திருநாள் கொண்டாடப்படுகிறது.பொங்கல் பண்டிகையை சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட செல்வது வழக்கம்.
சென்னைக்கு மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள தென் மாவட்ட மக்கள் குடும்பம் குடும்பமாக பொங்கல் பண்டிகையை கொண்டாட ஊர்களுக்கு செல்வார்கள்.
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் முன்பதிவு இன்று தொடங்கியது. ஜனவரி மாதம் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்வதற்கு முன்பதிவு தொடங்கியதால் பொது மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. 10 நிமிடத்தில் தென் மாட்டத்திற்கு செல்லும் எல்லா ரெயில்களிலும் இடங்கள் நிரம்பின. 2-ம் வகுப்பு படுக்கை வசதி முதல் ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு என அனைத்தும் நிரம்பி விட்டன.
பொங்கல் முன்பதிவு செய்ய ரெயில் நிலைய கவுண்டர்களில் கூட்டம் இல்லை. ஒரு சில நபர்களே வரிசையில் நின்றனர். ஆனால் பெரும்பாலான டிக்கெட்கள் ஆன்லைன் மூலமாக நிரம்பி விட்டன.
வீட்டில் இருந்தபடியும், தனியார் ஏஜென்சி மூலமாகவும் ஆன்லைனில் பல ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் பயணத்தை உறுதி செய்தனர்.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு காத்திருப் போர் பட்டியல் மிக நீளமாக காணப்படுகிறது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் 300-க்கு மேல் உள்ளன.
இது தவிர திருநெல்வேலி, மதுரை செல்லும் சிறப்பு ரெயில்களும் நிரம்பி விட்டன. இதே போல கோவை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிலும் அனைத்து இடங்களும் நிரம்பி காத்திருப் போர் பட்டியல் 300-ஐ தாண்டியுள்ளது.
சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் அண்ணாநகர், கடற்கரை, மாம்பலம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல ரெயில் நிலையங்களில் முன்பதிவு செய்ய பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆன்லைனில் விரைவாக டிக்கெட் எடுக்க முடியும் என்பதால் பெரும்பாலான பயணிகள் ஆன்லைனை நாடினார்கள். முன்பதிவு மையங்களில் காத்து நின்றவர்களுக்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே டிக்கெட் கிடைத்தது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
தென் மாவட்ட ரெயில்களில் குறிப்பாக நெல்லை எக்ஸ்பிரசில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டன.
2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் 362-ம், ஏ.சி. 3 அடுக்கு படுக்கை 7-ம் இடங்களும், 2-ம் வகுப்பு படுக்கை 18 இடங்களும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.
பொதிகை எக்ஸ்பிரசிலும் அதே நிலை நீடித்தது. 2-ம் வகுப்பில் 386 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கையில் 93 இடங்களும், 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கையில் 16 இடங்களும் காத்திருப்பில் இருக்கின்றன.
தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரசில் எல்லா வகுப்புகளும் நிரம்பி 2-ம் வகுப்பு படுக்கை வசதி 233 இடங்கள் காத்திருப்போரில் உள்ளன.
மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ்சில் அனைத்து வகுப்புகளும் நிரம்பு 2-ம் வகுப்பு படுக்கை வசதி காத்திருப்போர் பட்டியல் 389 ஆக உள்ளன. 3-ம் வகுப்பு ஏ.சி. 58 ஆக இருக்கிறது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் அனைத்து வகுப்புகளும் பி.கியூவாக அதாவது இனிமேல் முன்பதிவு செய்ய முடியாத நிலையில் 125 காணப்படுகிறது.
திருச்செந்தூர் எக்ஸ்பிரசில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன. 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் 124 காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.
அனந்தபுரி எக்ஸ்பிரசில் எல்லா வகுப்புகளும் நிரம்பி காத்திருப்போர் பட்டிய லுடன் காணப்படுகிறது.
12-ந் தேதி மாலை 6.20 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் சிறப்பு ரெயிலிலும் எல்லா இடங்களும் நிரம்பி காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.
திருச்சி செல்லும் மலைக்கோட்டை ரெயிலும் நிரம்பி வழிகிறது. அதிலும் இடங்கள் இல்லை. அன்றைய தினம் மதுரை செல்லும் சிறப்பு ரெயிலிலும் இடமில்லை.
கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரசில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் 35 ஆக காத்திருப்பில் உள்ளன. 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை 10-ம், 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை இடங்கள் 61-ம் காத்திருப்போர் பட்டியல் உள்ளன.
நீலகிரி எக்ஸ்பிரசில் எல்லா வகுப்புகளும் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது. 2-ம் வகுப்பு படுக்கை வசதியில் 325 இடங்களும், 2-ம் வகுப்பு ஏ.சி.படுக்கை 10 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. இடங்கள் 52 இடங்களும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.
எழும்பூரில் இருந்து சேலம் செல்லும் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நிரம்பி காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.