2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் திகதியின் பின்னர், இலங்கை மின்சார சபையின் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் சாரதிகள் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்ற போது, இடம்பெறுகின்ற நிதிமோசடிகள் உள்ளிட்ட சில பிரச்சனைகளை முன்வைத்து மின்வலுத்துறை பணியாளர்கள் சேவைப்புறக்;கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடர்பில் நேற்றைய தினம் அமைச்சருடன் சந்திப்பொன்று இடம்பெற்ற போதும், அதில் எந்த தீர்வும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
இதனையடுத்து மின்வலுத்துறையில் பணிபுரியும் சமயாசமய மற்றும் பயிற்சி பணியாளர்களை இன்றைய தினம் சேவைக்கு சமுகமளிக்குமாறும், இல்லாவிட்டால் அவர்கள் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.
எனினும், இன்றைய தினம் பெரும்பாலான பணியாளர்கள் சேவைக்கு சமுகமளிக்காத நிலையில், ஓய்வு பெற்ற பணியாளர்களை சேவைக்கு அழைக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டாலும், தம்மால் முன்னெடுக்கப்படுகின்ற தொடர்போராட்டம் தொடரும் என இலங்கை மின்வலு சேவை ஊழியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.