சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானியாவின் முன்னணி நாளிதழான பிரான்சியல் ரைம்சின், இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போல் மக் கிளீன் என்ற 25 வயதுடைய, ஒக்ஸே்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரியான இந்த ஊடகவியலாளர், தனது நண்பர்களுடன் சிறிலங்காவுக்கு சுற்றுலா வந்திருந்தார்.
இவர்கள், அறுகம்குடாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தனர். நேற்று மாலை 3.15 மணியளவில், கழிப்பறைக்குச் செல்வதாக, நண்பர்களிடம் கூறி விட்டுச் சென்ற ஊடகவியலாளர் காணாமல் போயிருந்தார்.
அவர், அப்பகுதியில் உள்ள முதலைகள் அதிகம் நடமாடும் ஆனை மலை என்று கூறப்படும் நீரேரியில் கைகளைக் கழுவ முயன்ற போது முதலை இழுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
நீருக்குள் இழுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் அவர் தனது கைகளை உயர்த்தி உதவி கோரியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அறுகம்குடா அருகே, ஆனை மலை நீரேரியில், நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் கடற்கரையில் இருந்து ஒருவரை முதலை ஒன்று ஆற்றுக்குள் இழுத்துச் செல்வதை கண்டதாக உள்ளூர் மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் ஆற்றின் மறுபக்கத்தில் அப்போது இருந்துள்ளார்.
உடனடியாக காவல்துறையினர் உதவி கோரப்பட்டு, தேடுதல்கள் நடத்தப்பட்டன. எனினும், முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளரின் உடல் மீட்கப்படவில்லை.
கடற்படை, இராணுவத்தின் துணையுடன் தேடுதல்கள் நடத்தப்பட்டாலும், ஆழமான, சேறு நிறைந்த நீரேரி என்பதால் உடலை மீட்பது கடினம் என்று கூறப்படுகிறது.முதலைகளை ஆழமான சேற்றுக்குள் உடல்களை மறைத்து விடும் என்றும், எனவே நாளை வரை உடலைக் கண்டுபிடிப்பது சிரமம் என்றும் கூறப்படுகிறது.
அறுகம்குடா உள்ளிட்ட சிறிலங்காவின் பல நீரேரிகளில் ஆபத்தான உவர் நீர் முதலைகள் வசிக்கின்றன. இவை தொடர்பான எச்சரிக்கைப் பலகைகளையும் அதிகாரிகள் நாட்டியுள்ளனர்.
இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.