130 கோடி மக்களும் மனது வைத்தால்தான் தூய்மை இந்தியா திட்டம் வெற்றிபெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்

425 0

130 கோடி மக்களும் மனது வைத்தால்தான் தூய்மை இந்தியா திட்டம் வெற்றிபெறும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு நாடு முழுவதும் “தூய்மை இந்தியா” பிரசார இயக்கத்தை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் பொதுமக்களிடம் குப்பை கூளங்களை அகற்றுவது, சுத்தம்-சுகாதாரத்தை பராமரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரை சிம்மக்கல் பகுதியில் “தூய்மை இந்தியா” விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். வ.உ.சி. சிலை அருகே சாலையில் கிடந்த குப்பைகளை அகற்றிய அவர், வ.உ.சி. சிலையையும் சுத்தம் செய்தார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகளும் அந்த பகுதி முழுவதையும் சுத்தம் செய்தனர்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் சுத்தம்- சுகாதாரத்தை கடை பிடிக்க வேண்டியது அனைவரின் கடமை. இதனை மத்திய-மாநில அரசுகளால் மட்டும் செய்து முடிக்க இயலாது. நம் தேசத்தில் 130 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் மனது வைத்தால்தான் தூய்மை இந்தியா திட்டம் வெற்றிபெறும்.

சிங்கப்பூர் நாட்டின் சுத்தம்-சுகாதரம் குறித்து இங்கு அனைவரும் பேசி பெருமைப்படுகின்றனர். ஆனால் அங்கே 50 லட்சம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். அங்கு பரப்பளவும் மிகவும் குறைவு. இதனால் அங்கு சுத்தம்-சுகாதாரத்தை பராமரிப்பதில் அரசாங்கத்தின் வேலை பெரிதாக இருக்காது.

இந்தியாவில் அப்படியான நிலை இல்லை. எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் தேசத்தின் சுத்தம்- சுகாதாரத்தை ஆரோக்கியமான முறையில் நிலைநிறுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment