முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கொறடாவை நாங்கள் விசாரிக்க வேண்டும் என்று தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் அணி எம்.எல். ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னரிடம் மனு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் மனு கொடுத்தார்.அதன் அடிப்படையில் சபாநாயகர் 19 எம்.எல். ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார். அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த விளக்கம் போதாது என்று கூறி மீண்டும் கடந்த 7-ந் தேதி சபாநாயகர் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பினார். அதில், 14-ந் தேதி (நேற்று) மாலை 3 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டு இருந்தது. அவர்களில் ஜக்கையன் மட்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மற்ற 18 பேரின் சார்பில் வெற்றிவேல் எம்.எல். ஏ.வும், வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் சபாநாயகரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், கூறியிருந்ததாவது:-
முதல்-அமைச்சர் அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டியதாகவும், அதில், குறிப்பிட்ட எம்.எல்.ஏ.க் கள் (தினகரன் அணி) பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாகவும் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இப்படி ஒரு கூட்டம் நடப்பதாக எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை. எனவே, எங்களுக்கு கடிதம் அனுப்பியதை உறுதி செய்யும் ஆவணங்களை எங்களுக்கு தரவேண்டும். இது சம்பந்தமாக நாங்கள் முதல்-அமைச்சரிடமும், கொறடாவிடமும் விசாரணை நடத்துவோம். அதன் மூலம் அவர்கள் தவறு செய்ததை நிரூபிப்போம். அதன் பின்னர் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
ஓ.பன்னீர் செல்வத்தை வெளியேற்றி விட்டதாக தேர்தல் கமிஷனிடம் முதல்-அமைச்சர் ஆவணங்களை தாக்கல் செய்தார். இப்போது அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை சபா நாயகரிடம் அளித்து விட்டு வெளியே வந்த ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.நாங்கள் எங்கள் தரப்பு விளக்கத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம். எங்கள் எம்.எல். ஏ.க்கள் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராக வேண்டுமென்றால் அதற்கு கர்நாடக போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழக போலீசாரை நாங்கள் நம்ப தயாராக இல்லை என்றார்.