அமெரிக்காவில் உரிய ஆவணமின்றி வசித்துவரும் 8 லட்சம் பேர் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்று டிரம்ப், எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு சிறிய வயதிலேயே சென்று, உரிய ஆவணங்கள் இன்றி சுமார் 8 லட்சம் வெளிநாட்டினர் குடியேறி உள்ளனர். தற்போது இளம் வயதினராக உள்ள அவர்களில் சிலர் அங்கு படிக்கின்றனர், சிலர் வேலை பார்க்கின்றனர், சிலர் சொந்த தொழில் செய்கின்றனர்.
இவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி இருக்க தடை ஏதும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், ஒபாமாவின் முடிவுக்கு மாறான நிலையை எடுத்தார். 8 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட ‘டி.ஏ.சி.ஏ.’ என்று அழைக்கப்படுகிற பொதுமன்னிப்பை ரத்து செய்தார்.
இந்த முடிவு, அங்கு உரிய ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கண்டன போராட்டங்களும் நடந்தன. கோர்ட்டில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக ஜனாதிபதி டிரம்பை எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியின் தலைவர்கள் நான்சி பெலோசி, சக் ஸ்சூமர் நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினர். அதில் இந்த பிரச்சனையில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி வசிக்கிற 8 லட்சம் பேரை பாதுகாப்பது; அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி இருந்து படிக்கவும், வேலை பார்க்கவும் தற்காலிக அனுமதி வழங்க உடன்பாடு ஏற்பட்டது.
இதற்கு பதிலாக டிரம்பின் அமெரிக்க எல்லை பாதுகாப்பு திட்டத்தில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சி அவருடன் இணைந்து செயல்படுவது என்று முடிவு எட்டப்பட்டது.
இதுபற்றி எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நான்சி பெலோசியும், சக் ஸ்சூமரும் கூறியதாவது, “மெக்சிகோவுடனான எல்லையில் சுவர் கட்டும் திட்டத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து எல்லை பாதுகாப்பு திட்டங்களிலும் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது என உடன்பட்டுள்ளோம்” என்று கூறினர்.
ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கி இருப்பவர்கள் விவகாரத்தில் டிரம்புக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், சுமார் 8 லட்சம் பேர் நாடு கடத்தப்படும் அபாயம் நீங்கியுள்ளது.